வாய்ப்பேச்சிக்கு செயலால் பதிலளித்த ஷ்ரேயாஸ் ஐயர்!

இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பதால், குறை சொல்ல வேறு காரணங்கள் ஏதும் இல்லை என்பதால், ஸ்ரேயாஸ் ஆட்டம் முக்கிய பேசுபொருளாக மாறியது.

போட்டி 45: இந்தியா vs நெதர்லாந்து
முடிவு: 160 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

நெதர்லாந்து: 250 ஆல் அவுட் (47.5 ஓவர்கள்)

ஆட்ட நாயகன்: ஷ்ரேயாஸ் ஐயர் – 94 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 128 ரன்கள் (10 ஃபோர்கள், 5 சிக்ஸர்கள்)

ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை களத்தில் பெரிய சவால்களை சந்தித்திடவில்லை. ஆனால் பத்திரிகையாளர் சந்திப்பில் மிகப் பெரிய சவாலை சந்தித்து வந்திருந்தார் அவர். ஷார்ட் பாலுக்கு எதிரான அவருடைய தடுமாற்றம் பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு அதற்கு அவர் பதில் சொன்ன விதம் பெரும் விமர்சனங்களை சந்தித்தது. இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பதால், குறை சொல்ல வேறு காரணங்கள் ஏதும் இல்லை என்பதால், இதுவே முக்கிய பேசுபொருளாக மாறியது. அதற்கு மத்தியில் தான் நெதர்லாந்துக்கு எதிராகக் களமிறங்கினார் ஷ்ரேயாஸ்.

ஷ்ரேயாஸ் களமிறங்கியபோது இந்திய அணி 17.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்திருந்தது. நல்ல தொடக்கம் கிடைத்திருந்ததால், அதை இன்னும் சிறப்பாக்க வேண்டிய அவசியம் இருந்தது. எதிரணி நெதர்லாந்து என்பதால், ஐம்பதுக்கும் குறைவான ஸ்கோரும் கூட ஏமாற்றமாகவே பார்க்கப்படும். ஆனால் சிறப்பாக செயல்பட்டு தன் திறமையை நிரூபித்தார் ஷ்ரேயாஸ்.

களமிறங்கியதும் ஆரம்பத்தில் ஷ்ரேயாஸ் நிதானமாகவே விளையாடினார். முதல் 20 பந்துகளில் அவர் 1 ஃபோர் மட்டுமே அடித்தார். 25 ஓவர்கள் கடந்த பிறகு அவர் அடுத்த கியருக்கு மாறினார். அவர் ஒன்றும் பௌண்டரிகளாக அடித்துத் தள்ளிடவில்லை. தவறான ஒருசில பந்துகளை அடித்து ஆடிய அவர், ஒவ்வொரு பந்தையும் ரன்னாக மாற்ற முயற்சி செய்தார்.

சிங்கிள், டபுள் என ஒவ்வொரு பந்தையும் ரன்னாக மாற்றினார். எதிர் முணையில் விராட் கோலி இருந்ததால், ஸ்டிரைக் ரொடேஷன் என்பது எளிதானது. விராட் அவுட் ஆன பிறகும் கூட அவருடைய அணுகுமுறை அப்படியேதான் இருந்தது. அதனால் 48 பந்துகளில் அரைசதம் கடந்தார் அவர்.

அரைசதம் கடந்த பிறகு அவர் இன்னொரு கியரை கூட்டினார். இப்போது டார்கெட் செய்து பௌண்டரிகள் அடிக்கத் தொடங்கினார். 40வது ஓவருக்குப் பிறகு ஓவருக்கு ஓவர் ஃபோரோ, சிக்ஸரோ அடிக்கத் தொடங்கினார். வேன் டெர் மெர்வ், வேன் பீக், வேன் மீக்ரன் என அனைத்து வேன்களின் பந்துகளும் எல்லைக்கோட்டுக்குப் பறக்கத் தொடங்கின. அதனால் 84 பந்துகளில் சதமடித்தார் அவர்.

உலகக் கோப்பை அரங்கில் அவருடைய முதல் சதமாக இது மாறியது. சதம் அடித்தபிறகு தன் வேகத்தை இன்னும் அதிகரித்து டாப் கியரில் பயணித்தார் அவர். வேன் பீக் வீசிய 49வது ஓவரில் 3 சிக்ஸர்கள் பறக்கவிட்டு மிரட்டினார் அவர். ஒவ்வொரு போட்டியிலும் கிடைத்த நல்ல தொடக்கத்தை பெரிதாக்குவதற்கு முன் ஆட்டமிழந்து வெளியேறிய ஷ்ரேயாஸ், இந்த முறை கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று இன்னிங்ஸை முடித்து வைத்தார். இந்தியா 400 ரன்களைக் கடக்கவும் மிகமுக்கியக் காரணமாக அமைந்தார்.

ஆட்ட நாயகன் என்ன சொன்னார்?
“எனக்கு ஒரு மாதிரி தேஜாவூ ஃபீலிங்காக இருந்தது. இது ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் நடந்தது. அப்போது என் விக்கெட்டை பறிகொடுத்திருந்தேன். ஆனால் இந்த முறை ஆட்டமிழக்காமல் இன்னிங்ஸை முடிக்கவேண்டும் என்று உறுதியாக இருந்தேன்.

தசைபிடிப்புக்காக நான் எடுத்துக்கொண்ட மாத்திரைகள் வேலை செய்யவேண்டும் என்று நினைத்திருந்தேன். அது இன்று வேலை செய்தது. அதனால் எனக்கு மிகவும் சந்தோஷம்.

கடந்த சில போட்டிகளாக நான் எடுத்த ரன்கள் எனக்கு உதவிகரமாக இருந்தது. இந்த ஆடுகளம் ஒரு மாதிரி ஒட்டும் தன்மையோடு (tacky) இருந்தது. சில பந்துகள் அதே வேகத்தில் வந்தன. சில பந்துகள் நின்று மெதுவாக வந்தன. இருந்தாலும் அணிக்குக் கிடைத்த தல்ல தொடக்கத்தை நான் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று நினைத்திருந்தேன். நேரே அடிக்கும் அந்த ஷாட்களை நிறைய பயிற்சி செய்தேன். அதிலும் குறிப்பாக வலைப்பயிற்சியில் அந்த ஷாட்களை அடிக்கடி முயற்சி செய்தன. என் தலையை கீழே வைக்கவும், பந்துகளை நேரே அடிக்கவும் தொடர்ந்து முயற்சி செய்கிறேன். நல்ல பொசிஷனில் செட் ஆகிவிட்ட பின், பேட்டை தோளுக்குப் பின் கொண்டுசெல்லும் ஃபாலோ த்ரூவும் முக்கியம்”

– ஷ்ரேயாஸ் ஐயர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *