‘ஃபார்ம் இழந்து நான் தவித்த நிலையில், எளிதில் அணிக்கு திரும்ப முடியவில்லை. கோலியை இந்திய டீமில் அவ்வளவு சீக்கிரம் நிராகரித்துவிட முடியாது’- தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர கிரிக்கெட் வீரருமான விராட் கோலி தொடர்ந்து மோசமாக துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திவரும் நிலையில், அவர் விரைவில் தனது ஃபார்முக்கு திரும்புவார் என்றும், அவரைப் போன்ற ஒரு திறமையான வீரரை அணியில் இருந்து நிராகரிக்க முடியாது எனவும் விக்கெட் கீப்பரும், தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். விராட் கோலி தனது ஆக்ரோஷமான ஆட்டத்தாலும், அதிவேக ரன் குவிப்பாலும் ரன் மெஷின் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். இதனால் சர்வதேச அளவில் நம்பர் ஒன் வீரராகவும் இருந்து வந்தார்.

ஆனால், கடந்த 2019-ம் ஆண்டுக்குப் பிறகு விராட் கோலி செஞ்சுரி எதுவும் அடிக்கவில்லை. ரன்கள் குவிக்கவும் தடுமாறி வருகிறார். இதனால் கடந்த ஆண்டு அவர், அனைத்து விதமானப் போட்டிகளில், கேப்டன் பொறுப்புகளில் இருந்து பதவி விலகினார். கேப்டன் பொறுப்பு அழுத்தம் காரணமாகவே ரன்கள் குவிக்க கோலி தடுமாறுவதாக கூறப்பட்டு வந்தாலும், கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியப் பின்னரும், சொற்ப ரன்களே எடுத்து ஆட்டம் இழப்பதால், அணியில் அவரது இடம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில், இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ள தமிழக வீரரான தினேஷ் கார்த்திக், விராட் கோலிக்கு ஆதரவாக பேசியுள்ளார். தற்போதைய சரிவில் இருந்து மீண்டு வந்து விரைவில் விராட் கோலி ரன்கள் குவிப்பார் என்றும் கூறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் விராட் கோலி ரன் எடுப்பதில் மிகவும் தடுமாறியது, பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அணியை விட்டு விலகி சில காலத்திற்கு அவர் ஓய்வு எடுக்கலாம் என்றும் பேசப்பட்டது.
தற்போது தினேஷ் கார்த்திக்கும், விராட் கோலி போன்ற திறமையான வீரரை அவ்வளவு எளிதில் இந்திய அணியில் இருந்து நிராகரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். மகத்தான வெற்றிகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து வெளியேறியுள்ளது, அவருக்கு ஒரு நல்ல இடைவெளியை கொடுத்து, மீண்டும் புத்துணர்ச்சியுடனும், உத்வேகத்துடனும் அணிக்கு திரும்ப உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். ஃபார்ம் இழந்து தவித்தநிலையில், அவள்ளவளவு எளிதில் தன்னால் அணிக்கு திரும்ப முடியவில்லை என்றும், இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க கடுமையாக உழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.