ருத்ரதாண்டமாடிய ருதுராஜ்; சதம் விளாசிச் சாதனை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட், அதிரடியாக ஆடிச் சதம் அடித்தார்.

மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி, இந்தியாவின் முதல் இன்னிங்ஸை வழக்கம்போல் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இணை தொடங்கியது. கடந்த போட்டியில் அரைசதம் கண்ட ஜெய்ஸ்வால், இந்தப் போட்டியில் 6 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் டக் அவுட்டானார். மறுமுனையில் ருத்ரதாண்டவமாடினார்,

ருதுராஜ். 32 பந்துகளில் 51 அடித்த ருத்ராஜ், அடுத்த 20 பந்துகளில் சதம் அடித்து அசத்தி ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களைத் தெறிக்கவிட்டார். அதாவது, முதல் 22 பந்துகளில் 22 ரன்களை எடுத்திருந்த ருதுராஜ், அடுத்த 35 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். அவருடைய அதிரடியால் இந்தியா, இந்தப் போட்டியிலும் 200 ரன்களைக் கடந்தது.

குறிப்பாக, கடைசி ஒரு ஓவரில் மட்டும் அவரால் 30 ரன்கள் வந்தது. இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 123 ரன்கள் எடுத்திருந்தார். மறுமுனையில் ஆடிய திலக் வர்மாவும் ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் எடுத்திருந்தார்.

இன்றைய போட்டியில் ருத்ரதாண்டவமாடிய ருதுராஜ், 57 பந்துகளில் 13 பவுண்டரி, 7 சிக்ஸருடன் 123 ரன்கள் குவித்தார். இதன்மூலம் டி20யில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

இந்தப் பட்டியலில் 126* ரன்களுடன் சுப்மன் கில் முதல் இடத்தில் உள்ளார். அவர் நடப்பு ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக இந்த ரன்னை குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி 122* ரன்களுடன் 3வது இடத்தில் உள்ளார். தவிர, டி20யில் சதம் அடித்தவர்களின் பட்டியலிலும் ருதுராஜ் இணைந்துள்ளார்.

இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா 4 சதங்களுடன் முதல் இடத்திலும் சூர்யகுமார் யாதவ் 3 சதங்களுடன் 2வது இடத்திலும், கே.எல்.ராகுல் 2 சதங்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர். சுரேஷ் ரெய்னா, விராட் கோலி, தீபக் ஹூடா, சுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தலா 1 சதம் அடித்துள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஆரோன் ஹார்டி 4 ஓவர்கள் வீசி 1 விக்கெட் மட்டுமே எடுத்ததுடன், 64 ரன்களை வாரி வழங்கியிருந்தார்.

223 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி 8 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *