எல்.பி.எல் தொடரில் கண்டி அணியில் இணையும் அதிரடி மன்னன் சனத்
2022ஆம் ஆண்டுக்கான லங்கா ப்ரீமியர் லீக் (எல்.பி.எல்) தொடர் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், அதிரடி துடுப்பாட்ட வீரருமான சனத் ஜயசூரிய கண்டி பெல்கோன்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் சனத் ஜயசூரிய தெரிவிக்கையில், ‘2022 எல்.பி.எல் தொடரில் கண்டி பெல்கோன்ஸ் அணியின் ஆலோசகராக செயல்படுகின்ற வாய்ப்பு கிடைத்தமை ஒரு பாக்கியம். பல ஆண்டுகளாக இலங்கை கிரிக்கெட்டுக்கு சேவை செய்து அதன் வளர்ச்சிக்கு உதவி செய்ய கிடைத்தமை தொடர்பில் நான் மிகுந்த திருப்தி அடைந்துள்ளேன். எனவே, அந்தப் பயணத்தின் ஓர் அங்கமாக இம்முறை எல்.பி.எல் தொடரில் கண்டி பெல்கோன்ஸ் அணிக்கு ஆலோசகராக செயற்படும் வாய்ப்பு கிடைத்தமை எனக்குக் கிடைத்த பாக்கியம்.
இது ஒரு அற்புதமான புதிய ஆரம்பமாக இருக்கும். இம்முறை எல்.பி.எல் தொடரில் சந்திப்போம்’ என குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டுக்கான எல்.பி.எல் தொடர் இம்மாதம் 31ஆம் திகதி முதல் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானம் மற்றும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகியவற்றில் நடைபெறவிருந்த நிலையில் தொடர் மீண்டும் டிசம்பர் மாத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.