தன் வாயால் வந்த வினை.. ஜாம்பவான் அர்ஜுனவிடம் 2 பில்லியன் நஷ்டஈடு கோரும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம்
தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவர் அர்ஜுன ரணதுங்க அண்மையில் ஊடகம் ஒன்றின் போது வெளியிட்ட இழிவான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட அறிக்கை குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இலங்கை கிரிக்கெட் சபையின் செயற்குழுவிற்கு எதிராக தவறான மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இலங்கை கிரிக்கெட்டின் நல்லெண்ணம் மற்றும் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் வகையில், தீங்கிழைக்கும் நோக்கத்துடன் பேசி, வேண்டுமென்றே பகிரங்க கருத்துக்களை வெளியிட்ட அர்ஜூனவுக்கு எதிராக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.
அதன்படி செயற்குழு உறுப்பினர்கள், அர்ஜுன ரணதுங்கவுக்கு கோரிக்கை கடிதங்களை அனுப்பி, பொய்யான மற்றும் இழிவான அறிக்கையின் மூலம் இலங்கை கிரிக்கெட் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நற்பெயர் இழப்புகளுக்கு 2 பில்லியன் நஷ்ட ஈடாக கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசியக் கிண்ணப் போட்டிகளை நடத்துவதற்கான உரிமம் இலங்கையிடம் இருந்தபோதும் அதனை நடத்தாமல், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வழங்கியதன் மூலம் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தவறிழைத்திருப்பதாக அர்ஜுன ரணதுங்க அண்மையில் கருத்து தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை ஏன் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் தேசிய விளையாட்டு பேரவை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் அர்ஜுன ரணதுங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.