வாயில் கட்டுப்போட்டு களமிறங்கிய தமிழக வீரர். பாபா இந்திரஜித்திற்கு என்ன நடந்தது? பரபர விளக்கம்!

ராஜ்கோட்: விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதி சுற்றில் ஹரியானா அணிக்கு எதிரான போட்டியின்போது தமிழக வீரர் பாபா இந்திரஜித் வாயில் கட்டுப்போட்டு கொண்டு களமிறங்கி பேட்டிங் செய்த சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதி போட்டியில் ஹரியானா அணியை எதிர்த்துத் தமிழ்நாடு அணி விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஹரியானா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 293 ரன்கள் சேர்த்தது. சிறப்பான ஆடிய ராணா 116 ரன்களும், யுவராஜ் சிங் 65 ரன்களும் விளாசினர். அதேபோல் தமிழ்நாடு அணி சார்பாக நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பின் களமிறங்கிய தமிழ்நாடு அணி 47.1 ஓவரில் 230 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஹரியானா அணி, முதல்முறையாக விஜய் ஹசாரே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. தமிழ்நாடு அணி சார்பாகப் பாபா இந்திரஜித் 64 ரன்கள் சேர்த்து அசத்தினார். இவர் களமிறங்கிய போதே வாயில் கட்டுப்போட்டு கொண்டு களமிறங்கியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன்பின் வாயில் கட்டுப்போட்டு கொண்டு அதற்கு மேல் ஹெல்மட் அணிந்து விளையாடிய இந்திரஜித், 71 பந்துகளில் 64 ரன்கள் விளாசிய சம்பவம் கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இவர் வாயில் கட்டுடன் களமிறங்கியது எதனால் என்று ரசிகர்கள் குழம்பினர். இதன்பின் தோல்விக்குப் பின் தமிழக அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், பாபா இந்திரஜித் உதடில் காயம் ஏற்பட்டதாக விளக்கம் அளித்தார்.

ஹரியானா பேட்டிங் முடிவடைந்த பின் தமிழக வீரர் இந்திரஜித் பாத் ரூமில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது கால் தவறி வழுக்கி விழுந்தபோது, உதடில் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் கொஞ்சம் பெரியளவில் இருந்ததால், அதிகளவிலான ரத்தம் வெளியேறியுள்ளது. வெளி உதடு மட்டுமல்லாமல் உள் உதடிலும் காயம் ஏற்பட்டுள்ளது. போட்டி முடிவடைந்த பின் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு, உடனடியாகச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *