வாய்ப்பை வீணடித்த சுப்மன் கில்; ருதுராஜை இறக்கியிருக்கலாம்; T20-க்கு செட் ஆக மாட்டார் போலயே!

ஜொகன்னஸ்பெர்க்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் மீண்டும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தப் போட்டியிலும் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்படவில்லை. மீண்டும் சுப்மன் கில்லுக்கு தான் வாய்ப்பு வழங்கப்பட்டது. 2வது டி20 போட்டியில் கில் டக் அவுட்டாகி வெளியேறியதால், அவரது ஆட்டம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்தது.

அதுமட்டுமல்லாமல் ஜொகன்னஸ்பெர்க் மைதானம் அளவில் சிறியது என்பதால், பெரிய இலக்கை இந்திய அணி நிர்ணயிக்கும் என்று பார்க்கப்பட்டது. இதன்பின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் – சுப்மன் கில் கூட்டணி தொடக்க வீரர்களாகக் களமிறங்கியது. முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள் அடிக்கப்பட, 2வது ஓவரில் ஜெய்ஸ்வால் 15 ரன்களை விளாசித் தள்ளினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 2 ஓவர்களிலேயே 29 ரன்கள் குவிக்கப்பட்டது. இதன்பின் மஹாராஜ் உடனடியாக அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார்.

அப்போது சுப்மன் கில் முதல் பந்தில் ரன்கள் சேர்க்க முடியாமல் திணற, அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனால் வெறும் 6 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்துப் பெவிலியன் திரும்பினார். 2வது டி20 போட்டியில் டக் அவுட்டான நிலையில், 3வது டி20 போட்டியிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஆஸ்திரேலியா டி20 தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

5 டி20 போட்டிகளில் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 223 ரன்களை விளாசினார். அதுமட்டுமல்லாமல் ஒரு சதம் விளாசி அபாரமான ஃபார்மில் இருந்தார். ஆனால் சுப்மன் கில் அணிக்குத் திரும்பியபின், ருதுராஜ் கெய்க்வாட் பெஞ்ச் செய்யப்பட்டுள்ளார். 2வது டி20 போட்டியின்போது அவரின் உடல்நிலை சரியில்லை என்று கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம் அளித்த நிலையில், இன்றைய போட்டியில் சேர்க்கப்படாதது குறித்து எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. இதனால் ருதுராஜ் கெய்க்வாடை இந்திய அணி நிர்வாகம் மற்றொரு ஆப்ஷனாகவே பார்க்கப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *