லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் தொடர் 2022 – இலங்கை லெஜெண்ட்ஸ் அணியில் இணைந்த பல முன்னாள் நட்சத்திர வீரர்கள்.. தெறிக்க விடலாமா !!!!

சர்வதேச கிரிக்கெட் உலகில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் வீதி பாதுகாப்பை மையப்படுத்தி இந்தியாவில் நடைபெறும் ரோட் சேஃப்டி வேல்ட் சீரீஸ் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெறுகின்ற நிலையில், அதில் பங்கேற்கும் இலங்கை லெஜெண்ட்ஸ் அணியில் பல புதிய வீரர்கள் இணைந்துள்ளனர். அதன் படி அசேல குணரட்ன, டில்ஷான் முனவீர, டில்ருவன் பெரேரா, மஹேல உடவத்த ஆகியோர் புதிதாக இணைந்து கொண்டுள்ளனர்.

திலகரட்ன டில்ஷான் தலைமையிலான இலங்கை லெஜெண்ட்ஸ் அணியின் உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சனத் ஜயசூரிய அணி பயிற்றுநராகவும் செயற்படவுள்ளார். இலங்கை லெஜெண்ட்ஸ் அணியில் கடந்த வருடம் விளையாடிய உப்புல் தரங்க, நுவன் குலசேகர, தம்மிக்க பிரசாத், அஜந்த மெண்டிஸ், மலிந்த வர்ணபுர, ரசல் ஆர்னல்ட், கௌஷல்ய வீரரட்ன, சாமர கப்புகெதர ஆகியோர் இந்த வருடமும் தொடர்ந்து விளையாடவுள்ளனர்.
இந்திய லெஜெண்ட்ஸ், அவுஸ்திரேலிய லெஜெண்ட்ஸ், இலங்கை லெஜெண்டஸ், மேற்கிந்தியத் தீவுகள் லெஜெண்ட்ஸ், தென்னாபிரிக்க லெஜெண்ட்ஸ், பங்களாதேஷ் லெஜெண்ட்ஸ், இங்கிலாந்து லெஜெண்ட்ஸ், நியூஸிலாந்து லெஜெண்ட்ஸ் ஆகிய 8 அணிகள் இம்முறை போட்டியிடுகின்றன. முதலாம் கட்டமாக லக்னோவில் செப்டெம்பர் 10 முதல் 15 வரை 7 போட்டிகள் நடைபெறும். இரண்டாம் கட்டமாக ஜோத்பூரில் செப்டெம்பர் 16 முதல் 19 வரை 5 போட்டிகள் நடத்தப்படும். கட்டாக்கில் செப்டெம்பர் 21 முதல் 25 வரை 3ஆம் கட்டமாக 6 போட்டிகள் நடத்தப்படும்.
கடைசிக் கட்டமாக ஹைதராபாத்தில் செப்டெம்பர் 27 முதல் அக்டோபர் 2 வரை 10 போட்டிகளும் அதனைத் தொடர்ந்து இறுதிப்போட்டியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.