கேப்டனாக மாறிய ஜடேஜா; சூர்யகுமாருக்கு நடந்தது என்ன!

ஜொகன்னஸ்பெர்க்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஃபீல்டிங்கின்போது இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் களம்விட்டு அகன்ற நிலையில், உடனடியாக ஜடேஜா மாற்று கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் 56 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அதேபோல் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 41 பந்துகளில் 60 ரன்களை விளாசினார்.

இதன்பின் தென்னாப்பிரிக்கா அணி 202 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வீரராக ஹென்ரிக்ஸ் – ப்ரீட்ஸ்கே கூட்டணி களமிறங்கியது. இந்திய அணி தரப்பில் முதல் ஓவரை முகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரில் ஒரு ரன்னை கூட விட்டுக் கொடுக்காமல் மெய்டனாக வீசி அசத்தினார். இதன்பின் முகேஷ் குமார் வீசிய 2வது ஓவரில் ப்ரீட்ஸ்கே 4 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து அர்ஷ்தீப் சிங் வீசிய 4.2வது பந்தில் ஹென்ரிக்ஸ் 8 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

தொடர்ந்து 3.4 ஓவரின்போது இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஃபீல்டிங் செய்தபோது காயம் ஏற்பட்டது. நடக்க முடியாத சூழலில் அவரை இந்திய அணி வீரர்கள் தூக்கி சென்றனர். கிட்டத்தட்ட ஐபிஎல் தொடரின்போது கேஎல் ராகுல் எப்படி காயமடைந்தாரோ, அதேபோல் சூர்யகுமார் யாதவும் காயமடைந்து களம்விட்டு அகன்றார்.

இதன்பின் துணை கேப்டனான ஜடேஜா, தலைமை பொறுப்பை ஏற்று கொண்டார். இதுவரை இந்திய அணிக்காகத் தலைமை பொறுப்பை ஜடேஜா ஒருமுறை கூட ஏற்றதில்லை. ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக மட்டுமே சில போட்டிகளில் தலைமை தாங்கினார். அதையும் இடையே ராஜினாமா செய்த நிலையில், முதல்முறையாக இந்திய டி20 அணியை வழிநடத்துகிறார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேப்டனாகப் பொறுப்பேற்ற பின் ஜடேஜா செய்த பவுலிங் மாற்றங்கள் இந்திய அணிக்குச் சரியான பலனை அளித்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய 6வது ஓவரில் கிளாஸன் 5 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து பவர் பிளே ஓவர்கள் முடிவடைந்து களத்தில் ஸ்பின் இருப்பதை அறிந்து ஜடேஜா உடனடியாகப் பந்தை கையில் எடுத்து மார்க்ரமை பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *