எவ்வளவு விக்கெட் வீழ்த்தினாலும் சரி, அந்த வீரர் மட்டும் அடங்கவே மாட்டார்; சூர்யகுமார் யாதவ் பேட்டி!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் வெற்றிக்கான போராட்டத்தையும், பயமின்றி ஆடிய கிரிக்கெட்டையும் நினைத்துப் பெருமை கொள்வதாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 56 பந்துகளில் 100 ரன்களை விளாசினார். இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 13.5 ஓவர்களில் வெறும் 95 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலமாகத் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்தப் போட்டியில் ஆட்டநாயகனாகச் சதம் விளாசிய சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். முதல் 25 பந்துகளில் வெறும் 27 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த சூர்யகுமார் யாதவ், அடுத்த 31 பந்துகளில் 73 ரன்களை விளாசித் தள்ளினார் சூர்யகுமார். அதேபோல் 2 போட்டிகளில் சேர்த்து 156 ரன்களை விளாசிய சூர்யகுமார் யாதவ் தொடர் நாயகன் விருதையும் தட்டி சென்றார்.

வெற்றிக்குப் பின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், நன்றாக நடக்க முடிவதால், பெரிய காயமில்லை என்றே நினைக்கிறேன். எப்போதும் சதம் விளாசுவது மிகச்சிறந்த உணர்வை அளிக்கும். அதிலும் இந்திய அணி வெற்றிபெற்றால், கூடுதம் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த டி20 தொடரைத் தொடங்கும்போது நாங்கள் ஒன்றை மட்டும் உறுதி செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அதுஎன்னவென்றால், எந்த அச்சமும் இல்லாமல் கிரிக்கெட்டை விளையாடுவது தான்.

எங்கள் வீரர்கள் வெற்றிக்கான குணத்தையும், போராட்டத்தை வெளிப்படுத்தியது தான் எனக்குச் சந்தோஷமே. குல்தீப் யாதவை பொறுத்தவரை எவ்வளவு விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் மகிழ்ச்சியடைய மாட்டார். விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற பசியுடன் இருப்பார். இந்த 5 விக்கெட்டுகள், அவரது பிறந்தநாளுக்கு அவரே கொடுத்துக் கொண்ட பரிசாகக் கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரை நமது ஆட்டத்தைப் பற்றி நமக்கு நன்றாகத் தெரிய வேண்டும். அதன்பின் களத்தில் இறங்கி ரசித்துக் கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *