டெஸ்ட் போட்டி கேப்டவுன் பிட்ச்: ஒரே நம்பிக்கை விராட் கோலி!
கேப்டவுன்: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. அந்த மைதானத்தின் ஆடுகளம் இந்திய அணிக்குக் கடும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. எனவே இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரைச் சமன் செய்ய முடியும் என்ற நெருக்கடியில் இந்திய அணி உள்ளது.
இந்த நிலையில், இரண்டாவது போட்டி நடைபெறும் கேப்டவுன் மைதானத்தின் ஆடுகளத்தில், பவுலிங்கில் அதிக வேகம் மற்றும் அதிக பவுன்ஸ் இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே சுழற்பந்துவீச்சாளர்களுக்கு இங்குப் பெரிதாக வேலையில்லை. இந்திய அணி ஒரே ஒரு ஸ்பின் பவுலரை மட்டுமே பயன்படுத்துவதாகத் தெரிகிறது.
இந்த ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக பவுன்ஸ் மற்றும் வேகம் கிடைப்பதால், தென்னாப்பிரிக்க அணி முதல் போட்டி போன்று நான்கு வேகப்பந்து வீச்சாளர்களைக் களமிறக்கி இந்திய அணிக்குக் கடும் சவாலாக இருக்கும்.
கடந்த காலங்களில் கேப்டவுன் மைதானத்தில் ரன்கள் குவித்த ஒரே இந்திய வீரர் விராட் கோலி மட்டுமே. பேட்டிங் சராசரி 56 ரன்கள். எனவே இந்திய அணி அவரைச் சார்ந்தே உள்ளது. மற்ற பேட்ஸ்மேன்கள் சராசரியாக 20-30 ரன்கள் எடுத்தால் அது இந்திய அணிக்குப் பெரிதும் உதவும். இதுதான் அங்கு நிலவரம்.
இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா, சிராஜ், முகேஷ் குமார் ஆகியோர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.
இந்த போட்டியின்போது முதல் மூன்று நாட்களுக்கு மழை இருக்காது. ஆனால் கடந்த இரண்டு நாட்களில் 40 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால், அது பெரிதாக இருக்காது என்று வானிலை அறிக்கை கூறுகிறது. முதல் டெஸ்டில் மூன்று நாட்களுக்குள் இந்திய பேட்ஸ்மேன்கள் இரண்டு இன்னிங்ஸிலும் ஆல் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.