இந்திய அணியை இப்படி தேர்வு செய்யுங்கள்; வீரர்களுக்கு இது முக்கியம்; முகமது ஷமி!

மும்பை: டி20 உலக கோப்பை தொடருக்கு இந்திய அணி நல்ல பார்மில் இருக்கும் வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என நட்சத்திர வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முகமது ஷமி இந்திய அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். உச்சகட்ட பார்மில் இருக்கும் முகமது ஷமி அடுத்து எந்தத் தொடரில் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


இந்நிலையில், உலக கோப்பை தொடரின் போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முகமது ஷமி வெளியேறியுள்ளார். உலகக் கோப்பை தொடரின் போது தினமும் ஊசி போட்டு விளையாடிய அவர், அன்றிலிருந்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாகத் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய அணி தேர்வு செய்யப்படவில்லை. முகமது ஷமி உடல்நிலையை பொறுத்து அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளுக்குத் தேர்வு செய்யப்படுவாரெனக் கூறப்பட்டுள்ளது.


இந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணிகுறித்த விவாதம் தொடங்கியுள்ளது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் சிறந்த வீரர்கள் மற்றும் சேர்க்கைகள் அடிப்படையில் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார் இந்திய மூத்த வீரர் முகமது ஷமி.


இதுகுறித்து பேசிய முகமது ஷமி, இன்னும் சில மாதங்களில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கும். எனவே டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக இன்னும் நேரம் இருக்கிறது என்று நினைக்கிறேன். டி20 உலக கோப்பை தொடருக்கு நல்ல பார்மில் இருக்கும் வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும். மேலும் சரியான கலவையுடன் அணியை உருவாக்குங்கள்.

ஒருவேளை நான் நன்றாக விளையாடி நல்ல பார்மில் இருந்தால் என்னைத் தேர்வு செய்யலாம். டி20 உலகக் கோப்பை தொடரில் யார் விளையாட விரும்பமாட்டார்கள் என்றார். இந்திய அணியில் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோரின் இடம் ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில், மற்றொரு பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் தனது இடத்தைக் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடருக்கு முகமது ஷமி தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *