14 ரன்கள் தேவை; சௌரவ் கங்குலிக்கு அருகில் ரோஹித் சாம்ரா; சாதனை படைக்கப் போகிறார் ஹிட்மேன்!

ஐதராபாத்: இந்திய அணிக்காக அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடிக்க இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. விராட் கோலி, புஜாரா, ரஹானே போன்ற மூத்த வீரர்கள் இல்லாமல் இந்திய அணி 13 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாகக் களமிறங்குகிறது. இது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


பேஸ்பால் அணுகுமுறையுடன் விளையாடி வரும் இங்கிலாந்து அணிக்குப் பாரம்பரிய முறைப்படி டெஸ்ட் விளையாடும் இந்திய அணி எப்படி சவால் விடும் என்ற ஆர்வம் சர்வதேச அளவில் உள்ளது. ஹைதராபாத் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும் என்பதால் 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் இங்கிலாந்து களமிறங்கவுள்ளது.

இந்நிலையில், இந்த டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு அபார சாதனை படைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வடிவங்களிலும் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர் 664 போட்டிகளில் விளையாடி 34,357 ரன்கள் எடுத்துள்ளார்.

அவருக்குப் பிறகு, விராட் கோலி 522 போட்டிகளில் 26,733 ரன்கள் எடுத்துள்ளார். 3வது இடத்தில் உள்ள ராகுல் டிராவிட் 504 போட்டிகளில் விளையாடி 24,064 ரன்கள் குவித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 18,433 ரன்களுடன் 4வது இடத்திலும், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 18,420 ரன்களுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.

சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடிக்க ரோஹித் சர்மாவுக்கு 14 ரன்கள் தேவை. இந்த டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா 14 ரன்கள் எடுத்தால், இந்திய அணியில் அதிக ரன்கள் எடுத்த 4-வது வீரர் என்ற சாதனையை ஹிட்மேன் பெறுவார். ரோஹித் சர்மா 467 போட்டிகளில் விளையாடி 46 சதங்கள் மற்றும் 100 அரைசதங்கள் அடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *