ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல் செப்டம்பர் 11ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இதுவரையில் 14 தொடர்கள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ள நிலையில், த்ரில்லிங்கான ஆட்டங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தலாம்.
01
2008-ம் ஆண்டு கராச்சியில் நடந்த இந்தியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் 8 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கேரம் வகை சுழலில் மாயாஜாலம் காட்டிய இந்த பந்து வீச்சு தான் ஆசிய கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சாக நீடிக்கிறது.
02
2010-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 268 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு கடைசி 2 பந்தில் 3 ரன் தேவைப்பட்ட போது முகமது அமிர் வீசிய 5-வது பந்தை ஹர்பஜன்சிங் சிக்சர் விளாசியது மறக்க முடியாத ஒரு தருணம்.
03
2012-ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 330 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து சாதனை படைத்தது. இதில் இந்திய வீரர் விராட் கோலி 183 ரன்கள் நொறுக்கினார். ஒரு நாள் போட்டியில் கோலியின் சிறந்த ஸ்கோர் இது தான்.
04 இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது 100-வது சர்வதேச சதத்தை நிறைவு செய்தது ஆசிய கோப்பை போட்டியில் தான். 2012-ம் ஆண்டு மிர்புரில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தெண்டுல்கர் சதம் அடித்தும் (114 ரன்) இந்தியா தோற்றது கசப்பான விஷயம்.
05
2014-ம் ஆண்டில் மிர்புரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 246 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணியில் கடைசி ஓவரில் சாகித் அப்ரிடி, சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் பந்து வீச்சில் அடுத்தடுத்து இரு சிக்சர் பறக்கவிட்டு தங்கள் அணிக்கு வெற்றி தேடித்தந்தது திரில்லிங்கான ஆட்டங்களில் ஒன்றாக பதிவானது.
06
2016-ம் ஆண்டு 20 ஓவர் ஆசிய கிரிக்கெட்டில் இந்திய அணி, பாகிஸ்தானை 83 ரன்னில் சுருட்டி வெற்றி பெற்றதும், அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் இந்தியாவின் டாப்-3 பேட்ஸ்மேன்களை ஒரே மாதிரி எல்.பி.டபிள்யூ. செய்ததும் திகைப்பூட்டுவதாக அமைந்தது.
07
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ‘டை’யில் முடிந்த ஒரே ஆட்டம் இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான (2018-ம் ஆண்டு) மோதல் தான். அதில் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 253 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 49.5 ஓவர்களில் 252 ரன்னில் ஆல்-அவுட் ஆனதால் சமன் ஆனது.