விலகிய ஜடேஜா; வெற்றிடத்தை நிரப்ப 3 வீரர்களுள் அதிக வாய்ப்பு!

இந்திய கிரிக்கெட் அணி தற்போது காயம் காரணமாகப் பல வீரர்கள் விளையாடாமல் தவித்து வருகின்றனர். இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.


முதல் டெஸ்டில் இந்திய அணி 19 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு பெரிய இலக்கை நிர்ணயித்தது.


இதை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி 2-ம் தேதி நடைபெறுகிறது. முகமது சமி, விராட் கோலி போன்ற அனுபவமிக்க வீரர்கள் ஏற்கனவே இந்திய அணியிலிருந்து விலகிய நிலையில், தற்போது முதல் டெஸ்டில் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா இருவரும் காயம் காரணமாக வெளியேறியுள்ளனர்.

இது இந்தியாவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மாற்று வீரராகச் சர்பிராஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ரஜத் பட்டிதார் அணியில் இடம்பிடித்துள்ள நிலையில், இந்த 2 வீரர்கள் விளையாடும் லெவனில் யார் இடம் பெறுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது ஜடேஜா விலகியிருப்பதால் அவருக்குப் பதிலாக யார் விளையாடுவார்கள் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


இந்தப் பட்டியலில் குல்தீப் யாதவ் முதலிடத்தில் உள்ளார். அவர் தனது இடது கை லெக் ஸ்பின் பந்து வீச்சில் இங்கிலாந்து வீரர்களுக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். ஆனால் அதன் பிறகு அவருக்கு அணியில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால் ஜடேஜா இடத்தில் குல்தீப் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது. இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் வாஷிங்டன் சுந்தர் உள்ளார். வாஷிங்டன் சுந்தர் ஒரு ஆல்ரவுண்டர் மற்றும் அவரை விளையாடும் லெவனில் சேர்ப்பது பேட்டிங் வரிசையைப் பலப்படுத்தும். இதனால் அவருக்கும் வாய்ப்பு உள்ளது, அதேபோல் சவுரப் குமாரும் இதுவரை ரஞ்சி போட்டியில் 290 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


அவர் ஏற்கனவே இந்திய அணியில் இடம்பிடித்திருந்தாலும், அவருக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சமீபத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான நான்கு நாள் பயிற்சி ஆட்டத்தில் சவுரவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மூன்று வீரர்களும் வாய்ப்புக்காகப் போட்டி போடுவதால், யாருக்கு இடம் கிடைக்கும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *