விராட் கோலி இல்லையா; பேட்டிங் பயிற்சியைத் தொடங்கிய குட்டி கோஹ்லி!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல், என்சிஏ மைதானத்தில் மீண்டும் பேட்டிங் பயிற்சியைத் தொடங்கியதை வீடியோ ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில், நட்சத்திர வீரர் விராட் கோலி தனது சொந்த காரணங்களால் டெஸ்ட் தொடரிலிருந்து முற்றிலும் விலகியுள்ளார். இதனால் அவரது இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.


ஏனெனில் முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடிய 4-வது நம்பர் வரிசையில் கே.எல்.ராகுல் விளையாடினார். இதன்பின், வலது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக 2வது டெஸ்டிலிருந்து கே.எல்.ராகுல் விலகினார். இதையடுத்து 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார்.


ஆனால் அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியிலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் கே.எல்.ராகுலை டாக்டர்கள் பரிசோதித்து முழு உடற்தகுதி அடைந்தால் மட்டுமே களம் இறங்குவாரென அறிவிக்கப்பட்டுள்ளது. 4 மற்றும் 5 என்ற பேட்டிங் வரிசையில் ரஜத் பட்டிதார் மற்றும் சர்பராஸ் கான் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


2வது டெஸ்டில் ரஹானே பாணியில் ரஜத் பட்டிதார் சற்று விளையாடிச் சுழற்பந்து வீச்சாளர்களைச் சிறப்பாக எதிர்கொண்டார். அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், என்சிஏவில் சிகிச்சை பெற்று வந்த மூத்த வீரர் கே.எல்.ராகுல் பேட்டிங் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.


இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் ராஜ்கோட்டில் நடைபெறும் 3வது டெஸ்டில் கே.எல்.ராகுல் விளையாடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த மண்ணில் இதுவரை 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கே.எல்.ராகுல் ஒரு சதம், 9 அரைசதங்களுடன் மொத்தம் 1031 ரன்கள் குவித்துள்ளார்.

குறிப்பாக மறுபிரவேசம் போட்டியில் தென்னாப்பிரிக்காவில் சதம் அடித்த கே.எல்.ராகுல் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் 86 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள விராட் கோலிக்கு பிறகு கேஎல் ராகுலிடம் மட்டுமே சிறந்த நுட்பம் உள்ளது. இதன் காரணமாக அவர் உடல்தகுதியை அடைந்தால் இந்திய அணியின் பிரச்சனைகள் குறையும் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *