Cricket
அடிமேல் அடி ஆஸ்திரேலிய அணிக்கு; தடுமாறும் இந்திய அணி!
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பார்ப்போம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இரு அணிகள் யார் என்ற கேள்விக்கு விடை காண அனைத்து அணிகளும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன.
இதன்படி ஒவ்வொரு அணிகளின் வெற்றியின் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் புள்ளிவிவரங்கள் புள்ளிகளைக் காட்டிலும் வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி முன்னேறியுள்ளது. இந்திய அணி விளையாடிய 7 ஆட்டங்களில் 4 வெற்றி, 2 தோல்வி, 1 டிரா என 50 புள்ளிகள் பெற்று 59.52 வெற்றி சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதன் மூலம் 2வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா அணி 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்வி, ஒரு டிரா என 55 சதவீத வெற்றி விகிதத்துடன் 3வது இடத்தில் உள்ளது. இந்த புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்த போதிலும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என நியூசிலாந்து கைப்பற்றியது.
இதனால் 4 போட்டிகளில் 3 வெற்றி, 1 தோல்வி என 75 சதவீத வெற்றியுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேற வாய்ப்பில்லை. இந்தியா முதலிடத்திற்கு முன்னேற வேண்டுமானால் நியூசிலாந்து தோற்க வேண்டும். நியூசிலாந்து அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தத் தொடர் ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.