கிரிக்கெட் உலகில் மூன்று விதமான போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் டெஸ்ட் போட்டி உதயமானது. அதனைத் தொடர்ந்து 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக ஒருநாள் சர்வதேச போட்டிகள் உதயமானது. இறுதியாக நேரத்தையும் கருத்தில் கொண்டு நான்கு மணித்தியாலங்களுக்குள் நிறைவடையக்கூடிய அணி 20 ஓவர்கள் கொண்ட இருபதுக்கு இருபது போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்த போட்டிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அங்கீகாரம் வழங்கி கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து குறித்த இருபதுக்கு இருபது சர்வதேச போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இருபதுக்கு இருபது சர்வதேச போட்டிகளில் ஏராளமான சாதனைகள் நாளுக்கு நாள் படைக்கப்பட்டு தான் வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்திருக்கின்ற இந்த போட்டி தொடரை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஏராளம் இருக்கிறார்கள். நாம் இந்த இடத்தில் ஒரு சாதனை பற்றி பார்க்க இருக்கிறோம். அந்த சாதனை என்னவென்று சொன்னால் இருபதுக்கு இருபது சர்வதேச போட்டிகளில் அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற 5 அணிகள் தொடர்பில் தான்.
அந்த வகையில் குறித்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றன அணி செக் குடியரசாகும். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டி ஒன்றில் துருக்கி அணிக்கு எதிரான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய செக் குடியரசு அணி 279 ஓட்டங்களை குவித்தது. குறித்த வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய துருக்கி அணி 22 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழக்க செக் குடியரசு 257 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதுதான் இருபதுக்கு இருபது சர்வதேசப் போட்டிகளில் ஒரு அணி அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்றுக்கொண்ட வெற்றியாக காணப்படுகிறது. இதற்கு அடுத்ததாக அனைத்து அணிகளும் 200க்கும் குறைவான ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்தில் ருமேனியா அணி காணப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துருக்கி அணிக்கு எதிராக நடைபெற்ற அந்த போட்டியில் ருமேனிய அணி 173 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இவ்வாறு இரண்டாவது இடத்தில் காணப்படுகிறது. 3ஆவது இடத்தில் இலங்கை அணி காணப்படுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு கென்ய அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 172 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இவ்வாறு மூன்றாவது அதிகூடிய ஓட்டங்களினால் வெற்றியை பதிவு செய்த அணியாக காணப்படுகிறது.
நான்காவதாக பாகிஸ்தான் அணி காணப்படுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு கராச்சியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. ஐந்தாவது இடத்தில் இந்திய அணி காணப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு அயர்லாந்தின் டுப்ளினில் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இவ்வாறு 5ஆவது இடத்தில் காணப்படுகிறது.