அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும் இடையிலான இருதரப்பு தொடரின் இறுதி தொடரான 4 போட்டிகள் கொண்ட ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் டெஸ்ட் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணியில் டெஸ்ட் அறிமுகம் பெற்று விளையாடும் சுப்மன் கில் மிக அபாரமாக விளையாடி வருகிறார்.
அவுஸ்ரேலியா அணியுடன் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் மற்றுமொரு இளம் வீரரான பிரீத்திவி ஷா விளையாடினார். அவர் ஏற்கனவே அவுஸ்திரேலியா அணியுடன் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் சொதப்பிய நிலையிலேயே முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பினை பெற்றுக் கொண்டார். ஆனால் அவர் அந்த போட்டியில் சிறப்பான முறையில் விளையாடவில்லை.
முதல் இன்னிங்ஸில் ஓட்டம் இன்றி ஆட்டமிழந்ததுடன் இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 4 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மற்றும் ஒரு இளம் துடுப்பாட்ட வீரரான சுப்மன் கில் அணியில் இடம் பெற்றார். சுப்மன் கில் இரண்டாவது போட்டியில் 45 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்சில் ஆட்டமிழந்ததுடன், இரண்டாவது இனிங்ஸில் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சுப்மன் கில் கன்னி அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் சுப்மன் கில் ஒரு சாதனையையும் படைத்துள்ளார். அதாவது அவுஸ்திரேலிய மண்ணில் அரைச்சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை தற்போது அவர் பெற்றுள்ளார்.
அது மாத்திரமல்லாமல் ஆசியக் கண்டத்திற்கு வெளியில் இளம் வயதில் அரைச் சதமடித்த நான்காவது வீரர் என்ற பெருமையையும் சுப்மன் கில் பெற்றுக்கொண்டுள்ளார். இதன்மூலம் தான் விளையாடிய முதல் தொடரிலேயே முத்திரையை பதித்துள்ளார் சுப்மன் கில்.