முஷ்டாக் அலி தொடரில் ஹீரோவான நம்ம தமிழன் ஷாருக்கானை ஏலத்தில் எடுக்க போட்டி போடும் 3 அணிகள் இவைதான்

விளையாட்டு

கிரிக்கெட் உலகில் நடைபெறுகின்ற பிரபலமான லீக் தொடர்களில் ஒன்றான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 14வது பருவ காலத்திற்கான தொடரானது எதிர்பார்க்கின்ற மே மாதம் மிக கோலாகலமாக நடைபெறுகிறது. ஆனால் தொடர் இந்தியாவில் நடைபெறுமா அல்லது வெளிநாட்டில் நடைபெறுமா என்பது இதுவரையில் தெரிவிக்கப்படாத நிலையில் போட்டிக்கான முழு ஆயத்தங்களும் நடைபெற்று வருகிறது. கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் வெற்றிகரமாக நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் ஆனது தற்போது 13 வருடங்களை நிறைவு செய்திருக்கிறது.

14வது பருவ காலத்திற்கான தொடர் ஆனதே இந்த வருடம் மே மாதம் நடைபெற இருக்கிறது. இவ்வாறான நிலையில் குறித்த 2021 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சில அணிகள் தங்களுடைய அணிகளில் புதிய வீரர்களை கொள்வனவு செய்வதற்காக ஏலத்தில் பலவிதமான திட்டங்களை மேற்கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் வீரர்களை கொள்வனவு செய்வதற்கான ஏலமானது எதிர்வரும் 18ஆம் திகதி சென்னையில் மாலை 3 மணி அளவில் நடைபெற இருக்கிறது.

நேற்றைய தினம் ஏலத்திற்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி முடிவடைந்த நிலையில் மொத்தமாக விண்ணப்பித்தவர்களின் பெயர் விபரங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. இவ்வாறான நிலையில் ஒரு இந்திய வீரரரை ஏலத்தில் எடுப்பதற்கு மூன்று அணிகள் போட்டி போட்டு வருகிறது. அந்த வீரர் யாருமில்லை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷாருக்கான்.

அண்மையில் நடைபெற்று முடிந்த சையித் முஷ்டாக் அலி கிண்ண தொடரில் தமிழக அணிக்காக விளையாடிய ஷாருக்கான் மிக மிக அதிரடி துடுப்பாட்ட வீரராக மாறி இருந்தார். காலிறுதிப் போட்டி ஒன்றில் 19 பந்துகளுக்கு 40 ஓட்டங்களை விளாசியதன் மூலம் அனைவருடைய கவனமும் இவர் பக்கம் திரும்பியது. மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடி வரும் சிறந்த ஒரு துடுப்பாட்ட உடற்தகுதியை கொண்டுள்ள இந்த ஷாருக்கானை நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ஏலத்தில் எடுப்பதற்கு மூன்று அணிகள் திட்டமிட்டுள்ளது.

அதில் முதலாவதாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணி காணப்படுகிறது. சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய ஷேன் வொட்சன் ஓய்வு அறிவித்த நிலையில் அவருக்கு மாற்று வீரராக ஒரு துடுப்பாட்ட வீரர் தேவைப்படுகிறார். இந்நிலையிலேயே ஷேன் வொட்சனுக்கு பதிலாக ஷாருக்கான் ஏலத்தில் கொள்வனவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஆரோன் பின்ச் மற்றும் மொயீன் அலி ஆகியோர் நீக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த கூடிய ஒரு வீரர் தேவை என்பதன் அடிப்படையில் பெங்களூர் அணியும் ஷாருக்கானை குறி வைத்திருக்கிறது. இறுதியாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி.

புதிய அணித்தலைவர் சஞ்சு சம்சன் தலைமையில் புதிய ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ள ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் துடுப்பாட்ட வரிசையில் மிகவும் மோசமான நிலையில் உள்ளதன் காரணமாக ஒரு அதிரடி துடுப்பாட்ட வீரர் தேவை என்பதன் அடிப்படையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஷாருக்கானை ஏலத்தில் கொள்வனவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *