இது பங்களியுடன் பெற்ற வெற்றியல்ல.. இந்தியா – பாக். அணிகளுக்கு விடுத்த மரண எச்சரிக்கை. முதல் அணியாக சுப்பர்-4 சுற்றுக்கு தகுதிபெற்ற நபியின் படை
ஆசியக்கிண்ண தொடரில் சுப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தகுதிபெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி இந்திய – பாகிஸ்தான் போன்ற அணிகளுக்கு சுப்பர் 4 சுற்றில் சவால் விடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. லீக் தொடரில் சார்ஜாவில் அரங்கேறிய 3-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் பலப்பரீட்சை நடத்தின. ‘டாஸ்’ ஜெயித்த கேப்டன் ஷகிப் அல்-ஹசன் தைரியமாக பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய அணியை ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமான் மிரள வைத்தார்.
ஸ்டம்பை குறி வைத்து சுழல் தாக்குதலை தொடுத்த அவர் முகமது நைம் (6 ரன்), அனாமுல் ஹக் (5 ரன்), கேப்டன் ஷகிப் அல்-ஹசன் (11 ரன்) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றினார். ரஷித்கான் தனது பங்குக்கு விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிமை (1 ரன்) காலி செய்தார். 28 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து வங்காளதேச அணி தள்ளாடியது.
20 ஓவர் முழுமையாக ஆடிய பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்கு 127 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. ஆப்கானிஸ்தான் 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்ராகிம் ஜட்ரன் 42 ரன்களுடனும் (41 பந்து, 4 பவுண்டரி), நஜிபுல்லா ஜட்ரன் 43 ரன்களுடனும்( 17 பந்து, ஒரு பவுண்டரி, 6 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். ஏற்கனவே இலங்கையை வீழ்த்தி இருந்த ஆப்கானிஸ்தானுக்கு இது 2-வது வெற்றியாகும். இதன் மூலம் ‘பி’ பிரிவில் முதலிடத்தை பிடித்த ஆப்கானிஸ்தான் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை எட்டியது.