கிரிக்கெட் உலகில் ஒரு கால கட்டத்தில் கொடி கட்டிப் பறந்த வீரர்கள் எல்லா காலங்களிலும் அவ்வாறு கொடிகட்டி பறப்பதில்லை. ஒரு சில போட்டிகளில் சொதப்பும் பட்சத்தில் அவர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைப்பதில்லை. அவ்வாறு அவருக்கு பதிலாக அணியில் இணைக்கப்பட்ட இளம் வீரர்கள் அணியில் தங்களது இடத்தை உறுதிப்படுத்தும் வேளையில் குறித்த கொடிகட்டிப்பறந்த வீரர்கள் அணியில் வாய்ப்பு கிடைப்பதில்லை. அதனுடன் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது என நாம் நினைக்கலாம். அவ்வாறு நிகழ்ந்த ஒரு சம்பவம் தொடர்பில் தான் நாம் பார்க்கவுள்ளோம்.
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தம்புள்ளையில் நடைபெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியின் போது இலங்கை அணியில் சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்ட
உபுல் தரங்க கடந்த 15 ஆண்டுகளாக இலங்கை கிரிக்கெட் அணிக்காக மூவகையான போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். ஒரு காலத்தில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கி ‘கவர் ட்ரைவ்’ மூலம் அனைத்து ரசிகர்களினதும் கவனத்தை ஈர்த்த உபுல் தரங்க அண்மைக்காலமாக இலங்கை அணியில் இடம்பெறவில்லை.
இளம் வீரர்களின் வருகையினால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் இறுதியாக 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தின் போது ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடியிருந்தார். இவ்வாறான நிலையிலேயே 15 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக உபுல் தரங்க அறிவித்தார்.
இலங்கை அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகளிலும், 235 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும், 26 இருபதுக்கு இருபது சர்வதேச போட்டிகளிலும் உபுல் தரங்க விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 1,754 ஓட்டங்களையும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 6,951 ஓட்டங்களையும், இருபதுக்கு இருபது சர்வதேச போட்டிகளில் 407 ஓட்டங்களையும் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.