‘நேர்மை எங்கே போய் விட்டது ? ஆட்டநாயகன் விருது தாகூருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்’ – சாம் கரனுக்கு வழங்கியமை தொடர்பில் கோலி கவலை தெரிவிப்பு

விளையாட்டு

இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரை இந்திய அணி 2-1  என்ற அடிப்படையில் கைப்பற்றியது. ஒருநாள் சர்வதேச தொடரின் தொடர் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடைபெற்ற மூன்றாவது முக்கியமான ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 329 ஓட்டங்களை குவித்தது. 

துடுப்பாட்டத்தில் ரிஷப் பண்ட் 78 ஓட்டங்களையும், ஷிகர் தவான் 67 ஓட்டங்களையும், ஹர்திக் பாண்டியா 64 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டங்களாக பெற்றுக்கொண்டனர். 330 என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 322 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 7 ஓட்டங்களினால் பரிதாபமாக தோல்வி கண்டது.

இங்கிலாந்து அணியின் வெற்றிக்காக இளம் வீரரான சாம் கரன் இறுதி வரை போராடினார். ஆனால் அது பலனளிக்கவில்லை. இந்திய அணியின் பந்துவீச்சில் ஷர்துல் தாகூர் மிக முக்கியமான 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்ததுடன், புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்களையும், நடராஜன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். போட்டியின் ஆட்ட நாயகன் விருது எப்போதும் வெற்றி பெற்ற அணிக்கு வழங்கப்படும்.

ஆனால் இங்கிலாந்து அணிக்காக தனிமனிதனாக போராடி ஆட்டமிழக்காமல் 95 ஓட்டங்கள் குவித்த சாம் கரனுக்கு போட்டியின் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனால் இதற்கு இந்திய அணியின் தலைவரான விராத் கோலி அதிருப்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,

ஷர்துல் தாகூருக்கு தான் நேர்மையாக ஆட்ட நாயகன் விருது கொடுத்து இருக்க வேண்டும். அவருக்கு இந்த விருதை கொடுக்காதது ஆச்சரியமாக இருக்கிறது. அவர் 10 ஓவர் வீசி 67 ஓட்டங்களுக்கு 4 விக்கெட் கைப்பற்றினார். அதோடு 20 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். இதேபோல தொடர்நாயகன் விருதை புவனேஷ்குமாருக்கு கொடுத்து இருக்க வேண்டும். அவர் 3 விக்கெட் கைப்பற்றினார். ரன்களை அதிகமாக கொடுக்காமல் சிக்கனமாக வீசினார். என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *